கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள மிகவும் பழமையான எறையூர் புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தின் 156வது ஆண்டு பெருவிழாவையொட்டி நடைபெற்ற தேர்பவனி விழாவில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெற்றனர்.
பிரசித்தி பெற்ற இத்தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த மே 21-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதுச்சேரி இருதய ஆண்டவர் பசிலிக்கா திருத்தலத்தின் பேரருட்திரு பிச்சமுத்து தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தினமும் சிறப்பு திருப்பலிகள், ஜெப ஆராதனைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தொடங்கியது. அதற்கு முன்பாக தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் மறைமாவட்ட ஆயர் சுல்தான்பேட்டை பேராயர் அதிவணக்கத்திற்குரிய அந்தோணிசாமி பீட்டர் அபீர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தேர்பவனி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த ஆண்டின் தேர்பவனியில் புனித ஜெபமாலை அன்னை, புனித அந்தோணியார், குழந்தை இயேசு, சகாய மாதா உள்ளிட்ட 7 தேர்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களின் பார்வைக்கு காட்சியளித்தன. தேவாலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர்கள் எறையூர் மற்றும் சுற்றுவட்டார முக்கிய வீதிகள் வழியாக பவனியாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தன.
தேர்பவனியின் போது வானவேடிக்கைகள் விண்ணை அதிரச் செய்தன. மேளதாள இசைக்குழுவினரின் முழக்கத்துடன் கிராம இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் பாரம்பரிய தடியாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றதால் திருவிழா களைகட்டியது. பக்தர்கள் ஜெபமாலை பாடல்களைப் பாடியபடி தேர்களை வடம் பிடித்து இழுத்து தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.
எறையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் மட்டுமின்றி பல்வேறு மதங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்.
பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றதை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷானஸ் மேற்பார்வையில் 3 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் ஆய்வாளர்கள், 40 உதவி காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆன்மிக பக்தியும், பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகளும் இணைந்து நடைபெற்ற எறையூர் புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தின் 156வது ஆண்டு தேர்பவனி விழா, பக்தர்களின் மனதில் மறக்க முடியாத ஆன்மிக அனுபவமாக அமைந்தது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment